செய்திகள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தக கண்காட்சி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.4-–

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று 47-வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பிரபாகர ராஜா, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோபண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தக கண்காட்சியின் தொடக்க விழாவில் உரை நடைக்காக பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் (அவருக்கு பதில் ரெத்தின சபாபதி வாங்கினார்), கவிதைக்காக உமா மகேஸ்வரி, நாவலுக்காக தமிழ்மகன், சிறுகதைக்காக அழகிய பெரியவன், நாடகத்திற்காக வேலு.சரவணன், மொழிபெயர்ப்புக்காக மயிலை பாலு ஆகியோருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதே போன்று சிறந்த பதிப்பாளர்களுக்கான பபாசி விருதையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நான் பல ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு உள்ளேன். ஆனால், முதல் முறையாக புத்தக கண்காட்சி தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. இந்த முறை நான் சிறப்பு விருந்தினராக மட்டும் கலந்து கொள்ளவில்லை. நானும் ஒரு பதிப்பாளராக கலந்து கொண்டுள்ளேன்.

அதாவது, முத்தமிழறிஞர் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தை தொடங்கி, முரசொலியில் இளைஞர் அணிக்காக ஒதுக்கப்பட்ட பாசறை பக்கத்தில் வெளிவந்த அந்த கட்டுரைகளை தொகுத்து 9 புத்தகங்களை வெளி யிட்டுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இந்த புத்தகங்களை வெளியிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டாலின் வாழ்த்து

அதைத் தொடர்ந்து, சென்னை புத்தக கண்காட்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-–

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான 47-வது சென்னை புத்தக கண்காட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவும், அதிக அளவில் புத்தகங்கள் விற்பனையாகவும் வாழ்த்துகின்றேன். இன்னும் சில ஆண்டுகளில் 50-வது ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெற போகிறது. இது வாசிப்பின் மீதும், அறிவுத் தேடலின் மீதும், பற்று கொண்ட பகுத்தறிவாலும், முற்போக்கு சிந்தனையாலும் தமிழ் சமூகம் முன்னோக்கி நடைபோடுவதற்கு அடையாளம்.புத்தகம் வெளியிடுவது, பதிப்பிப்பது, விற்பனை செய்வது மற்றும் ஒரு தொழில் அல்ல. அது அறிவுத் தொண்டு. தமிழாட்சியும், தமிழர்கள் ஆட்சி யும் நடைபெறும் நம்முடைய தமிழ்நாட்டில் இத்தகைய அறிவுத் திரு விழாக்கள், தமிழ் திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் என்பது ஒரு தனிமனிதனின் அறிவுத் திறத்தின் அடையாளம் மட்டும் அல்ல. ஒரு சமூகம், மாநிலம், நாடு எந்த அளவிற்கு வளர்ந்து உள்ளது என்பதற்கான அடையாளம்.

மனிதரின் அன்றாட பழக்கமாக வாசிப்பு பழக்கம் இருக்க வேண்டும். புத்தகம் வாங்குகின்ற பழக்கத்தை, நூலகங்களுக்கு செல்கின்ற பழக்கத்தை பள்ளிக் காலத்திலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். தமிழினம் சிறக்க வேண்டுமானால், தமிழ் மொழி சிறக்க வேண்டும். தமிழ் மொழி செழிக்குமானால், தமிழினம் செழிக்கும். தமிழ் மொழியும், இனமும் செழிக்க புத்தகங்கள் துணை நிற்கட்டும். 47-வது சென்னை புத்தக கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

900 அரங்குகளைக்கொண்ட புத்தக கண்காட்சியானது வருகிற 21-ந் தேதி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *