வாழ்வியல்

சென்னை தையூரில் ஐஐடி-யின் உலகத் தர ஆராய்ச்சி வசதி

சென்னை தையூரில் ஐஐடி-யின் கண்டுபிடிப்பு வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்; சென்னை ஐஐடியில் இயங்கும் 2 ஆய்வு மையங்கள் 2021 இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா தரமணியில் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்களும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (ஸ்டார்ட்-அப்) இயங்கி வருகின்றன. இந்நிலையில், உலகத்தரத்திலான ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய கண்டுபிடிப்பு வளாகம் உருவாக்கும் முயற்சியில் ஐஐடி இறங்கியது.

இதற்காக கடந்த 2017-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் 163 ஏக்கர் நிலத்தை ஐஐடி-க்கு ஒதுக்கினார்.

இங்கு முதல்கட்டமாக மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் நிதியுதவியுடன் தேசிய துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோர தொழில்நுட்ப மையமும் அதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக,பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நிதியுதவியுடன் திட உந்து எரிபொருள் மாதிரிவசதி மையமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளன.

ஏற்கெனவே இந்த 2 மையங்களும் தற்போது ஐஐடி வளாகத்தில் சிறிய அளவில் இயங்கி வருகின்றன. இவை கண்டுபிடிப்பு வளாகத்தில் அனைத்து ஆராய்ச்சி உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிநவீன ஆய்வகங்களுடன் செயல்படும்.

தேசிய துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோர தொழில்நுட்ப மையத்தில் துறைமுகங்கள், கடல்சார்ந்த ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து ஐஐடி ஆராய்ச்சி மையங்கள் இந்த வளாகத்தில் நிறுவப்பட உள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு மாணவர்களும் வந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் முக்கிய மையமாகவும் இந்த வளாகம் திகழும். அதற்கேற்ப வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *