தண்டையார்பேட்டையில் சிறப்பு ரக குழந்தைகளுக்கு கல்வி, உடற்பயிற்சி தொழிற் பயிற்சி மையம் : சென்னை துறைமுக சேர்மன் சுனில் பாலிவால் திறந்தார்
சென்னை ஆக 31-
சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் சுய போதினி அறக்கட்டளை கூட்டாக இணைந்து சிறப்பு ரக குழந்தைகளுக்கு கல்வியுடன் உடற்பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளுடன் சுய போதினி பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி மையம் தண்டையார்பேட்டையில் சென்னை துறைமுக ஊழியர் வீட்டு வசதி காலனி உள்ள பகுதியில் விரிவாக்க வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இதை சென்னை துறைமுக சேர்மன் சுனில் பாலிவால் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் காமராஜர் துறைமுகம் நிர்வாக இயக்குனர் ஜே.பி. ஐரின் சிந்தியா, சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ். விஸ்வநாதன், சுய போதினி அறக்கட்டளை நிறுவனர் ராதாகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சுயபோதினி பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி மையம் ஏற்கனவே கடந்த ஆண்டில் சென்னை துறைமுக உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது கூடுதல் வசதிகளுடன் 44 மாணவர்களுடன் சிறப்பாக நிறுவப்பட்டுள்ளது.
இது வடசென்னை பகுதி ஆட்டிசம் குழந்தைகளுக்கு சிறந்த பயிற்சி மையமாக விளங்குகிறது என்று சேர்மன் சுனில் பாலிவால் தெரிவித்தார். ஆட்டிசம் குழந்தைகளுக்கான சுயபோதினி பள்ளி சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் சமூக நல நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆட்டிசம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை துறைமுக சேர்மன் சுனில் பாலிவால் பேசுகையில், ‘இந்த சுயபோதினி பள்ளி ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இயற்கை சூழலில் வேலை வாய்ப்பு பெற தேவையான தொழில்பயிற்சிகளை வழங்கி முன்னுதாரண கல்வி நிறுவனமாக விளங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இலக்குகளை தாண்டி சிறப்பாக செயல்பட்டு முன்னுதாரணமாக உள்ளது .அதேபோல சுயபோதினிபள்ளி ஆட்டிசம் மாணவர்களுக்கு அதிகபட்ச பயிற்சிகளை வழங்கி சுயமாக செயல்பட உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.