சென்னை, செப் 18
சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற “நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு” எனும் நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ் ஆகியோருக்கு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காசோலை வழங்கி கவுரவித்ததார்சென்னை துறைமுகத்தில் நேற்று ‘நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு’ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்கினார். இதில் மத்திய துறைமுகங்கள் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், சென்னை துறைமுகத்தின் சபைத்தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குனர் ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் விஸ்வநாதன், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாலினி வி.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியல், 2024-ம் ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ் ஆகியோரை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில், பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா ராம்தாசுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதேபோல, மற்றொரு பாரா ஒலிம்பிக் வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாததால் அவருக்கான ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட உள்ளது.
இதேபோல, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கவுரவித்தார். மேலும், பிரதமர் மோடியின் “தாயின் பெயரில் ஒரு மரம்” எனும் திட்டத்தின் கீழ், 300 பெண்கள் தங்களது தாய் பெயரில், 300 மரங்கள் நடும் நிகழ்வுகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துறைமுக மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வையும் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடிக்கு
சல்யூட்
நிகழ்ச்சியில், மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் பேசியபோது:-
நாட்டை தூய்மையாக வைத்திருக்க அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஒருவரது வாழ்க்கை தூய்மையாக இருக்கும்போது, சமூகமும் தூய்மை பெறும். நம் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்தை மையமாக கொண்டு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. அம்மாவை கொண்டாடும் விதமாக அவர்களது பெயரில் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியாவின் பெருமையும், வலிமையும் அதிகரித்து வருகிறது. இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். பிரதமர் மோடிக்கு எனது உள்ளத்தில் இருந்து சல்யூட் வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.