15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்
சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அரிசி ஏற்றுமதி
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்
சென்னை, டிச 10–
சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.
அரிசி மீதான கட்டுப்பாடுகள், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 20ந் தேதி இந்தியாவிலிருந்து அனைத்து வகை அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை துறைமுகத்திலிருந்து ‘எம்.வி.வான்.ஹே’ சரக்குக் கப்பலில் இந்தோனேசியாவிற்கு 5,100 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் அனுப்பப்பட்டது.
இது குறித்து துறைமுக போக்குவரத்து மேலாளர் எஸ்.கிருபானந்தசாமி கூறுகையில், ‘சென்னை துறைமுகத்தில் புதிதாக சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை இருப்பு வைக்கும் அளவுக்கு ரூ. 25 கோடியில் சேமிப்புக் கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பழைய சேமிப்புக் கிடங்குகளை சீரமைப்பதன் மூலம் துறைமுகத்தின் கிடங்கு கொள்ளளவு திறன் சுமார் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். இதற்காக, ரூ.52 கோடி செலவில் பழைய கிடங்குகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த சரக்குகளைக் கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’ என்றார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரிசி ஏற்றுமதி தொடங்கியுள்ள நிலையில், துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோரை சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்று பல புதிய சாதனைகளை எட்டுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.