செய்திகள்

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல்

விமான பயணிகள் மத்தியில் அச்சம்

சென்னை, அக். 21–

நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுதப் பூஜை, துர்கா பூஜை, தீபாவளி எனப் பல்வேறு பண்டிகையின் காரணமாக கடந்த 10 நாள்களாக உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றது. கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இதனால், சில விமானங்கள் பாதி வழியிலேயே அவசரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வந்த அனைத்து மிரட்டல்களும் வெறும் புரளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல, நாடு முழுவதும் நேற்று 24 இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதில், இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியாவின் தலா 6 விமானங்களுக்கு மிரட்டல்கள் வந்தன. இண்டிகோ விமானங்களில் பல வெளிநாடுகளுக்கு சென்றவை. மிரட்டல்களைத் தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், சம்மந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

100 மிரட்டல்கள்:

பயணிகள் அச்சம்

கர்நாடகாவில் பெலகாவியில் உள்ள விமான நிலையத்திற்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று முன்தினம் 2 மிரட்டல்கள் வந்த நிலையில் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. கடந்த ஒருவாரத்தில் இதுவரை சுமார் 100 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால் யார் இவ்வாறு புரளி கிளப்புவது என்பது இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், மிரட்டல் விடுப்பவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பண்டிகை காலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பிற ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், விமானங்கள் சரியான நேரத்தில் இயக்க முடியாதது, அவசர தரையிறக்கத்தால் விமான நிலையங்களின் அட்டவணை சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விமானப் போக்குவரத்து துறையும் பயணிகளும் கவலை அடைந்துள்ளனர்.

பொதுவாக இமெயில், போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில், தற்போது பெரும்பாலான மிரட்டல்கள் சமூக ஊடகங்கள் வழியாக விடுக்கப்பட்டவை. ஒன்றிரண்டு சம்பவங்களில் மட்டுமே விமானங்களின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் துண்டு சீட்டுகள் கிடைத்துள்ளன.

எனவே, இதில் இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் செயல்படும் அமைப்புகள் சம்மந்தப்பட்டிருக்குமா அல்லது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக பொது விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் (பிசிஏஎஸ்) விமான நிறுவன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.

இன்றும் 3 விமான

நிலையங்களுக்கு மிரட்டல்

இந்நிலையில் இன்று சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். விமான ஓடுபாதை, பயணியர் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், மர்ம பொருட்கள் ஏதும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, விமான நிலைய அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *