செய்திகள்

சென்னை- திண்டிவனம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலை

Makkal Kural Official

சென்னை, ஜன.28-

பண்டிகை காலங்களில் சென்னை-திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கருங்குழி-பூஞ்சேரி இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மதுராந்தகம் அருகில் உள்ள கருங்குழியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) உள்ள பூஞ்சேரி வரை உள்ள சாலை தற்போது மிகவும் குறுகலாக இருப்பதால் அப்பகுதியில் 32 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்று தெரியவந்தது.

அதனடிப்படையில் அரசு இங்கு புதிய சாலை அமைக்க முடிவு செய்து, ரூ.80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது.

இந்த சாலை அகலப்படுத்தப்பட்டால் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பிவிட முடியும்.

அத்துடன் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், மீண்டும் சென்னை திரும்பவும் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *