செய்திகள்

சென்னை தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.2,000 கோடி அரசு நிலம் மீட்பு

சோழிங்கநல்லூர், செப்.19-

சென்னையில் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

சென்னையை ஒட்டியுள்ள சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அங்குள்ள 91 ஏக்கர் அரசு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது. அதில் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு ரூ.2,000 கோடி ஆகும்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு கோர்ட், நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து அந்த நிலம் கோர்ட் உத்தரவுப்படி நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

மேலும் பொக்லைன் மூலம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு சொந்தமான 91 ஏக்கர் நிலங்களை ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. இந்த நிலத்தின் மீதான வழக்கில் நீண்டநாள் சட்டப்போராட்டத்திற்கு பிறகு அரசுக்கு சாதகமான தீர்ப்பை செங்கல்பட்டு கோர்ட் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.2,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள், மீட்கப்பட்டு வருகிறது.

குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களும் மீட்கப்படும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு வளர்ச்சிப்பணிக்கு நிலங்கள் தேவைப்படுவதால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் நிச்சயம் கையகப்படுத்தப்படும்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் விடுதி செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் அந்த இடம் காலி செய்யப்படும். அரசு நேர்மையாக உள்ளது என்பதற்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான நிலத்தை எந்தவித அழுத்தமும் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளதே சான்று. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *