செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- குஜராத் அணிகள் இன்று மோதல்

சென்னை, மார்ச் 26–

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன.

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால் பதிக்கிறது. 2-வது வெற்றியை நோக்கி சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன. கடைசியாக நடந்த 2 மோதலிலும் (கடந்த ஆண்டு இறுதிப்போட்டி, முதலாவது தகுதி சற்று) சென்னை அணியே வென்றுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

சென்னையில் நடைபெறும் 2-வது ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. இதனால் இந்த ஆட்டத்திலும் ரசிர்கர்களின் ஆர்ப்பரிப்பும், ஆதரவும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருக்கும் எனலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *