சென்னை, ஜன. 22–
சென்னை சூளைமேட்டில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த அமலாக்கப்பணியக காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை கட்டுபடுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுதுறை அனைத்து முயற்சிகளும் எடுத்துவருகிறது. சென்னை நகரில் அயல்நாட்டு போலி மதுபான ஆலை ரகசியமாக இயங்கி வருவதாக அமலாக்கப்பணியக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாடு அமலாக்கப்பணியக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில், ஐஜி கார்த்திகேயன், எஸ்.பி. ஷியாமளா தேவி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அமலாக்கப்பணியக மத்திய புலனாய்வு பிரிவு சென்னை மண்டல காவல் ஆய்வாளர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் தலைமையில் சென்னை சூளைமேடு பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோட்டில் வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில் அதற்குள் 50 போலி அயல்நாட்டு மதுபானம் பாட்டில்கள் ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ஆட்டோ டிரைவர் கார்த்திக் மற்றும் அதில் பயணித்து வந்த முகமது நசீம்தீன், ராவுத்தர் நைனார் முகமது, சையது அப்துல் காதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவற்றை கோபி என்பவரிடம் வாங்கி, அதிக விலை வைத்து விற்பதாக கூறினார்கள். அதனைடுத்து தனிப்படை போலீசார் உடனடியாக கோபி என்பவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டது தெரியவந்தது.
அந்த வீட்டை சோதனை செய்ததில் போலி மதுபானம் -210 லிட்டர், பாண்டிச்சேரி மாநில மதுபானம் -220 லிட்டர், ஹரியானா மாநில மதுபானம் 20 லிட்டர், 5,000 காலி மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வைத்து போலி மதுபானம் தயாரித்து பாட்டிலில் அடைத்து சென்னை நகர் முழுவதும் விற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். சென்னை நகரில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையிலான போலீசாரை டிஜிபி சங்கர்ஜிவால், கூடுதல் டிஜிபி அமல்ராஜ் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டண மில்லா சேவை எண்.10581 அல்லது 9498410581 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை அமலாக்கப்பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.