செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்

Makkal Kural Official

சென்னை, நவ. 15–

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் விடுவிக்கப்பட்டனர்.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சீசனில் (18-வது சீசன்) ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

சென்னை அணி 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை அணியில் இருந்து டெவோன் கான்வே , ரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி , தீபக் ஹூடா, விஜய் சங்கர் , ஜேமி ஓவர்டன் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர். முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.

இந்தநிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. ராஜஸ்தான் அணிக்காக 11 சீசன்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 4,027 ரன்கள் எடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *