முழு தகவல்

சென்னை: சீரும்-வரலாற்றுச் சிறப்பும்!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும். 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மதிப்பீட்டின்படி 89 லட்சம் மக்கள் தொகை உடையது. இது உலகிலேயே 31 ஆவது பெரிய பெருநகரப் பகுதி ஆகும்

சென்னை ஒரு நிலப்பகுதி-மக்கள் வாழும் ஒரு பெருநகரம் என்பதை தாண்டி, அது பலரின் உணர்வுகளோடு கலந்த ஒரு பெயராகி விட்டது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற ஏற்றதாழ்வு பார்க்காமல், அவர்களின் கனவுகளுக்கு ஒரு புகழிடமாக, அனைவரையும் அரவணைக்கும் அன்னையான நமது சென்னைக்கு அகவை 382.

சென்னையின் சிறப்பு எது?

நவீனங்களுக்கு ஏற்ப மாறுவதே சென்னையின் சிறப்பு என்று கூறியுள்ளார் வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ். சென்னையில் நாம் சந்திக்கும் யாரும் உண்மையில் சென்னையின் பூர்வ குடிகள் இல்லை. இடம்பெயர்ந்த தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களை உள்ளடக்கியதுதான் சென்னை. சென்னையின் சிறப்பே இதுதான்.

சென்னையின் பாரம்பர்யம் என்றாலே, ஜார்ஜ்கோட்டை பகுதிக்கு தெற்கே இருக்கும் தென்சென்னை பகுதியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மெரினா பீச், காந்தி மண்டபம், ஸ்பென்சர் பிளாசா, ஜெமினி பாலம், கோயம்பேடு பேருந்து நிலையம் இவையே நினைவுவரும். இவைதான் `சென்னை’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

`வடசென்னை’ எனச் சொல்லப்படும், கறுப்பர் நகரத்தைப் பற்றியோ, மேற்கில் இருக்கும் பூந்தமல்லி பற்றிப் பேசுவதோ ஆவணப்படுத்துவதோ இல்லை. ஆனால், இவைதான் இந்த மாநகரின், பாரம்பர்யங்களின் முதன்மை பகுதி. மிகப் பழைமையான நகரம் என்பதைத் தாண்டி, மிக முக்கியமான பலவும் இங்கு இருந்தே தொடங்கியிருக்கின்றன.

முதல் ரயில்நிலையம்

ராயபுரம் ரயில்நிலையம் தான் தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம். இது 1856-ல் கட்டப்பட்டது. இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மிகப் பழைமையான ரயில்நிலையமும் இதுதான். அதேபோல சென்னையின் அருங்காட்சியகமும் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்று.

மேலும் மேரிஸ் கார்ட்லி என்கிற பெண்தான் முதல் மருத்துவர். அவர் மருத்துவம் படித்தது சென்னைதான். பெண்களுக்கான முதல் மருத்துவமனையான ரெயினி மருத்துவமனை, சென்னையில்தான் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் இன்ஜினீயர் லலிதா, சட்டசபையில் முதன்முதலாக இருந்த பெண், முத்துலட்சுமி ரெட்டி, முதல் பெண் விமான ஓட்டி உஷா சுந்தரம் (இவர்தான் ப்ளூ க்ராஸை உருவாக்கியவர்) என இப்படிப் பலரையும் சொல்லலாம்.

கட்டடக் கலை எனப் பார்த்தால், இங்கு இருக்கும் சென்ட்ரல், விக்டோரியா கட்டடம் போன்ற இன்னும் சில கட்டடங்கள் சிவப்பு நிறக் கற்கள்கொண்டு கட்டப்பட்டவையே. இவை `இந்தோ சாரசெனிக்’ என்ற கட்டடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டவை. சென்னை சென்ட்ரலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் மேனேஜர் கட்டடம் போர்பந்தரிலிருந்து கப்பல் மூலம் கற்களை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டுக் கட்டப்பட்ட கட்டடம்.

சென்னையில் இன்னொரு ஸ்பெஷல், பல்லாவரம் பகுதியில் கிடைக்கும் அடர்பச்சை நிறத்திலான கிரானைட். ஜார்ஜ் கோட்டை தூண், ஜெயின்ட் மேரிஸ் சர்ச், ஜெயின்ட் தாமஸ் மவுன்ட் சர்ச் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கிரானைட்தான். இந்திய ரெயில்வேக்கான பயணச்சீட்டு, முன் பதிவுசெய்யும் விண்ணப்பம் போன்றவை அச்சடிக்கும் இடமும் சென்னையில்தான் இருக்கிறது.

முதல் ரெயில்வே தடம்

இந்தியாவின் முதல் ரெயில்வே தடம் தானாவிலிருந்து மும்பைக்கு 1853-ல் போடப்பட்டது என்பது தவறானது. முதல் ரெயில்வே தடம், செங்குன்றத்திலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை போடப்பட்ட ரயில்வே தடத்தைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இது 1838-ல் போடப்பட்டுள்ளது. ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து பெரிய பெரிய பாறைகளைக்கொண்டு போடப்பட்ட பாதைதான் இது. இப்படி எடுத்து வந்த பாறைகள் மூலம்தான் ஜார்ஜ் கோட்டையைப் பலப்படுத்தியிருக்கிறார்கள்.

அத்துடன், 200 ஆண்டுகள் பழைமையான மரிய மதலினா ஆலயம், பழநி கோயிலிலிருந்து கொண்டுவரப்படும் விபூதியைப் பிரசாதமாகவும் அலங்கரிக்க துளசியையும் பயன்படுத்தும் இஸ்லாமிய தர்காவான குனங்குடி மஸ்தான் ஆலயம், நெருப்புக் கோயில் என மத ஒற்றுமைக்கான இடமாகவும் இருக்கிறது.

கூவம், அடையாறு, பக்கிங்காம் போன்ற ஆறுகள் மூலம் ஒருகாலத்தில் சென்னை மிகவும் வளமான பகுதியாக இருந்துள்ளது. இவற்றைத்தாம் மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இதுபோல பல்வேறு பெருமைகளும் சென்னையின் புகழுக்கான வரலாற்றுச் சான்றுகள்.

மாற்றங்களை ஏற்கும் சிறப்பு

மேலும் சென்னையின் பூர்வக்குடிகளாக யாரையும் சொல்ல முடியாது. பழைமை உணவாகவும் எதையும் சொல்ல முடியாது. சென்னையின் சிறப்பே, எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்ததுதான்.

ஆம், அதுவும் உண்மைதான். இங்கு நாம் சந்திக்கும் யாரும் உண்மையில் சென்னையின் பூர்வகுடிகள் அல்லர். இடம்பெயர்ந்த தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களை உள்ளடக்கியதுதான் இந்த மாநகரம். இதுதான் மேலே சொன்னவற்றிலும்விட சென்னையை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது.

மேலும் அறிய… https://tinyurl.com/y3fplg3t

சென்னை நாள் தொடக்கம்

சென்னை, 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல்பட்டுவரும் ஒரு நகரம். சென்னை நகரத்தின் பிறந்தநாள் என்று ஒரு நாளை குறிப்பிட வேண்டும் என்று எண்ணிய குழுவினர், தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தின் பகுதியை, சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து, கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்தின் அடிப்படையில், அந்த தினத்தை சென்னை தினமாக கடைபிடிக்க முடிவுசெய்யப்பட்டு 2004ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பதிப்பாளர் வின்சென்ட் டி சோஸா உள்பட சென்னை வரலாறு குறித்த ஆர்வமிக்கவர்கள் இணைந்து 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாட வேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதத்தில் ‘சென்னை நாள்’ நிகழ்ச்சியைத் தொடங்கினர்.

மேலும் அறிய… https://tinyurl.com/y24fc8kj

இளவயது சென்னை

இந்தியாவில் உள்ள முக்கிய பெரிய நகரங்களில் மிகவும் இளம் வயது நகரம் சென்னைதான். இன்றும் வட மாநிலத்தவர்கள் சென்னையின் பழைய பெயரை வைத்து ‘மதராசி’ என்றே குறிப்பிடுகின்றனர். அதற்கு காரணம், மொழிவழி மாநிலங்களாக 1956 இல் தமிழ்நாடு பிரிக்கப்படும் வரையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்து ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ (Madras Presidency) என்றே அழைக்கப்பட்டது.

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, பல பகுதிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு சென்ற பிறகும், ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ ‘மெட்ராஸ் மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் தலைநகரான இன்றைய சென்னை, தொடக்க காலத்தில் சென்னைப்பட்டினம் என்றும் மதராசப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.

சென்னை நகரம் உருவாக காரணமான, கிழக்கு இந்திய கம்பெனிக்கு தன் நிலத்தைக் கொடுத்த வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை, சென்னப்ப நாயக்கர் பெயரால் தமிழில் சென்னைப் பட்டினம், சென்னை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. ஆங்கிலத்தில் மட்டும் ‘மெட்ராஸ்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இதனால், புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, பெயர் குழப்பம் ஏற்பட்டது. இந்த வரலாற்றின் அடிப்படையில் 1996 ஆம் ஆண்டு, தமிழக அரசால் பெயர் மாற்ற சட்டம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சென்னை என்றே எழுதும்வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை, ஆங்கிலத்தில் இன்றும் ‘மெட்ராஸ் யுனிவர்சிட்டி, மெட்ராஸ் ஹைகோர்ட்’ என்றே உள்ளது.

மேலும் அறிய… https://tinyurl.com/y5zm2yck

சென்னை நாளுக்கு எதிர்ப்பு

சென்னையின் பழைமையை பறைசாற்றும் விதமாக, சென்னை தினம் (Madras Day) பலரால் கொண்டாடப்பட்டாலும் ஒரு பிரிவினர், சென்னப்ப நாயக்கர் என்ற நிலப்பிரபு, ஆங்கிலேயர்களுக்கு (கிழக்கிந்திய கம்பெனி) நிலம் விற்றதால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகரத்தின் தோற்றம்தான் பிறந்த நாளுக்கு அடிப்படையா? என்றும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் கூட சொன்னைக்கு வயது 2000 போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்.

மேலும் அறிய… https://tinyurl.com/y2mvyjkh

ஆனாலும், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சென்னையைப் பற்றிப் பேசவோ எழுதவோ இந்த நாளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றளவில் இது சரியானது என்பதை மறுப்பதற்கில்லை.

பெருநகர சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) இந்தியாவின் மிகப் பழமையான நகராட்சி ஆகும். 1688 செப்டம்பர் 29 அன்று இது உருவாக்கப்பட்டது. இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) 1687 டிசம்பர் 30 இல்[1] கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட, புனித ஜார்ஜ் கோட்டை நகராட்சி மற்றும் ஏனைய பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 10 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயல்பட்டது. சென்னை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயல்பட்டது.

2011-ஆம் ஆண்டிற்கு பின், சென்னை மாநகராட்சியை ஒட்டிய காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் 174 சகிமீ பரப்பு கொண்ட 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதனால் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 சதுர கிலோ மீட்டராக உயர்ந்தது. விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 45 லட்சம் வாக்காளர்களையும், 200 மாமன்ற உறுப்பினர்களையும், 15 பெருநகர மாநகராட்சி மண்டலங்களும் கொண்டது. பெருநகர சென்னை மாகநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் 93 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய… https://tinyurl.com/y278z2rg

கோடம்பாக்கம், மாம்பலம் பெயர் ஏன்?

17,18 ஆம் நுற்றாண்டுகளில் ஆற்காடு நவாப்புக்கு சொந்தமானதாக இந்தப் பகுதி இருந்துள்ளது. அவருடைய குதிரைகளின் பசியை போக்கக்கூடிய நந்தவனமாக இது இருந்ததாம். அதனால் garden of horses என்னும் பொருள்படும் ‘கோடே பாக்’ (Ghoda bagh) என்று உருது மொழியில் பெயர் இருந்துள்ளது. பிற்காலத்தில் அதுதான் கோடம்பாக்கம் என்று மாறிவிட்டதாம்.

அதேபோல், மாம்பலம் பகுதியில் வில்வ மரங்கள் அதிகம் இருந்த காரணத்தினால் மகாவில்வம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பூந்தமல்லி

மல்லிகை பூக்கள் அதிகமாக இந்த பகுதியில் பயிரிடப்பட்டதாம். திருக்கச்சி நம்பி ஆழ்வார் இங்கிருந்துதான் தினமும் பூக்களை பறித்துக் கொண்டு காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தாராம். அதனால்தான் இந்த இடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலங்களில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயராகும்.

தண்டையார் பேட்டை

‘குணங்குடி மஸ்தான் சாகிப்’ என்பவர் 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்தாராம். அவர் ஒரு முஸ்லீம் துறவி. அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தொண்டி ஆகும். அதனால் இந்தப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அன்புடன் அழைத்தனர். அந்த ஏரியாவுக்குதான் இப்பொழுது தண்டயார்பேட்டை என்ற பெயர் இருக்கிறது.

மேலும் அறிய… https://tinyurl.com/y2fu4kw9, https://tinyurl.com/y5zy2ywl

சென்னையின் பழைய வரலாறு

முற்கால சென்னை மாகாணத்தின் தலைநகர் காஞ்சிபுரம் ஆகும். தொண்டை மண்டலம் கி.மு. 2வது நுற்றாண்டில் காஞ்சிபுர சோழ வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. இளந்திரையனுக்குப் பிறகு இப்பகுதியானது சோழ இளவரசன் இளங்கிள்ளி என்பவரால் ஆட்சி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. மூன்றாவது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9ம் நுற்றாண்டின் இறுதிவரை பல்லவர்கள் இப்பகுதியின்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதன் இடைப்பட்ட காலத்தில் சிறிது காலம் களப்பிரர்கள் ஆதிக்கமும் இருந்தது. மீண்டும் பல்லவர்கள், முதலாம் ஆதித்திய சோழனின் தலைமையிலான சோழ அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு கி.மு. 879 ஆம் ஆண்டில் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. கி.மு. 1264ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆதிக்கத்தால் சோழர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

1361ஆம் ஆண்டில், விஜயநகர மன்னரின் குமாரர்களாகிய இரண்டாம் குமார கம்பண்ணா மற்றும் முதலாம் புக்கர் ஆகியோர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தொண்டைமண்டலம் விஜயநகர பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. விஜயநகர் ஆட்சியாளர்களால் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை சுதந்திரமாக ஆள்வதற்கு நாயக் என்றழைக்கப்படும் தலைமைப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். அப்போதைய சென்னை நகரத்தின் பொறுப்பாளராக இருந்த மூன்றாம் வேங்கடா என்பவரின் தலைமையின்கீழ் இயங்கிய தமர்லா வெங்கடாபதி நாயக் ஒரு செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்தார்.

1639ஆம் ஆண்டில் கூவம் ஆற்றுக்கும் எழும்பூர் ஆற்றுக்கும் இடைப்பட்ட கடல் முகத்துவாரத்தை அடையக்கூடிய ஒரு சிறிய நிலப்பகுதி ஆங்கிலேயருக்கு வணிக நோக்கத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த கடற்கரை பகுதிகளான வடக்கில் பழவேற்காடு முதல் போர்ச்சுக்கீசிய குடியேற்றப்பகுதியான சாந்தோம் வரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் அவரது தந்தை சென்னநாயக் நினைவாக சென்னப்பட்டினமாக உருவெடுத்தது.

மேலும் அறிய… https://tinyurl.com/y2cveepe, https://tinyurl.com/yytoglz3

எழுத்து-தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப் பிரிவு: மக்கள்குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *