செய்திகள் நாடும் நடப்பும்

சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம், நவீனம் சுற்றுலா பொருளாதாரத்தை உயர்த்தும்


ஆர். முத்துக்குமார்


கடந்த மாதம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புது முனையம் ரூ.1260 கோடி முதலீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் கட்டுமானம் ஆகும்.

புதிய கட்டுமானத்தின் பயனாக தற்போது ஆண்டிற்கு 3 கோடி பயணிகளை கையாளும் சென்னை பன்னாட்டு விமானம் நிலையம் விரைவில் ஆண்டுக்கு 4 கோடி பயணிகளை கையாள வேண்டிய கட்டுமானமானமாக இருக்கிறது.

தற்போது சென்னை சர்வதேச விமான டெர்மினல் T–3 மேலும் T–4 மட்டுமே. பிரதமர் மோடி துவக்கி வைத்த புதிய முனையம் இன்று வரை பொதுமக்களின் உபயோகத்திற்கு வரவில்லை.

கடந்த 10 நாட்களில் பல தனியார் விமானங்கள் இப்புதிய முனையத்தின் வசதிகளை உபயோகித்து சோதிக்க அழைப்பு விடப்பட்டு மெல்லப் பரிசோதனை நிலையில் இருந்து உண்மையான சேவைகள் வழங்குவது துவங்கி வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் விமான வருகை சமீபமாக 30 நிமிடங்கள் குறிப்பிடப்பட்ட வருகை நேரத்திற்கும் முன்பே வருகிறது. ஆனால் சோதனை சமாச்சாரங்களில் பல மணிநேர கியூ வரிசை காத்திருப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

பயணிகளின் உடைமைகள் கைக்கு வர சராசரியாக ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகிவிடுவதும் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் விமான நிலைய சேவைகள் மிக வசதியாக இருப்பதற்கு அதிமுக்கிய காரணம் உடனடியாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறி தங்களது இல்லங்களுக்குச் சென்று விட முடிகிறது என்பதால் தான். அது மட்டுமா? பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நம்மோடு பயணிக்கும் பெட்டிகள் எந்தச் சேதமுமின்றி கைக்கு வந்து விடுகிறது.

இப்படி வரும் பெட்டிகள் தாமதமாக வர முக்கிய காரணங்களில் ஒன்று சோதனைகளுக்கு உட்படுத்துவதே! அதாவது அளவுக்கு அதிகமாக எடுத்து வரக்கூடாது எதையும் கடத்தி வருபவரின் பெட்டிகள் திறந்து பார்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பாதுகாப்பு சோதனை நவீன கருவிகள் கொண்டு செயல்பட்டால் அதிவேகமாகவும் துல்லியமாகவும் சோதனைக்குட்பட்டு உடனுக்குடன் பெட்டிகள் பயணிகளிடம் வந்து விடும்.

2020 கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த கட்டத்திலும் நமது நாட்டிற்கு வந்த பயணிகளில் 7% பேர் சென்னை நுழைவாயிலாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியாவில் இருந்து நம் நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கு சென்னை சர்வதேச விமான நிலையமே விருப்பமான தேர்வாக இருக்கிறது.

விமான நிலையக் கட்டமைப்பு நவீனமான பிறகு பெங்களூரு, ஐதராபாத் சர்வதேச விமான பயணியர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்தும் பயணிகள் விரும்பி வந்து செல்கிறார்கள்.

சென்னையில் நவீன சர்வதேச விமான நிலையம் சிறப்புற செயல்படத் துவங்கினால் சென்னை மற்றும் தமிழக சுற்றுலா பகுதிகளுக்கு வருவோர் எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்து விடும்.

தற்சமயம் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது மாமல்லபுரம் மற்றும் மெரீனா கடற்கரையையும் தான். பிறகு பாண்டிச்சேரிக்கோ, பெங்களூருக்கோ சென்று விடுவார்கள்.

சென்னையில் மருத்துவ வசதிகளுக்காக வரும் வெளிநாட்டு நோயாளிகள் சிறப்பான குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் பெறுபவர்கள் சுற்றுலா பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் எல்லா அறைகளும் தங்குபவர் ஆக்கிரமித்து வருகிறார்கள்.

உலகளாவிய பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னையில் தங்களது பணியிட சமாச்சாரங்களுக்கு வந்து தங்கி செல்பவர்களும் ஒரு வகையில் சுற்றுலா பொருளாதாரத்திற்கும் ஆதாரமாகவே இருக்கிறார்கள்.

அது தவிர திரைப்பட தயாரிப்பும் சென்னையில் மிக பிரபலமானது. உலக சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் இங்கு வந்து தயாரிப்பு, எடிட்டடிங் சமாச்சாரங்களுக்கு வருவதும் அதிகரித்து வருகிறது.

கல்விக் கூடங்களும் உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு பிடித்தமான ஓரு வேடந்தாங்கல் சென்னை என்பதையும் மறந்து விடக்கூடாது.

சென்னையின் நீண்ட நெடிய கடற்கரை சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு ஈர்ப்பாக இருந்தும் கோவா, கோவளம் போன்ற பெரிய ஈர்ப்பு கிடையாது.

ஆனால் சென்னையின் அருகாமையில் இருக்கும் ஏலகிரி, ஏற்காடு, கொல்லிமலை, கொடைக்கானல் மற்றும் எழில்மிகு ஊட்டி கண்டிப்பாக உலகச் சுற்றுலா பயணிகளுக்கு மிக ரம்மியமான விடுமுறை அனுபவத்தை தரும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் யுனஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள 5 இடங்கள் இருக்கிறது, அதில் ஒன்று தான் சென்னையில் அடையாளமாக இருக்கும் மாமல்லபுரம்.

கொரோனா பெருந்தொற்று ஒரு வழியாக வீரியம் குறைந்து நம்மிடமிருந்து விடை பெற்று வரும் இத்தருணத்தில் சுற்றுலா பொருளாதாரம் வளரத் துவங்கி விட்டது.

இந்நிலையில் சென்னையின் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கப்பட்டு இருப்பதுடன் நவீனமாகி செயல்பட ஆரம்பித்திருப்பது நல்ல செய்தியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *