செய்திகள்

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா: முரசு கொட்டி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.14–-

சென்னை சங்கமம்-−நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். 18 இடங்களில் இந்த திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் சார்பில், தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில், ‘சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா’ பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024-ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை, ‘முரசு கொட்டி’ தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியின் முதல் பாடலாக, நீலகிரி படுகர் இன பாரம்பரிய நடனத்துடன் கூடிய நீலகிரி மலையரசி குழுவினரின் தமிழ் மற்றும் தமிழர்கள் பெருமை சார்ந்த பாடல் பாடப்பட்டது.

தொடர்ந்து, நாட்டுப்புறப்பாடல்கள், கானா பாடல்கள், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், பறையாட்டம், ராப் இசை என நடப்பாண்டுக்கான சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நாட்டுப்புற கலைஞர்கள் பிரதிபலித்த கலையின் வடிவத்தை கண்டு, பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவற்றை கண்டு துள்ளல் போட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், டி.ஆர்.பி.ராஜா, மேயர் பிரியா, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, துணை மேயர் மகேஷ் குமார், இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாக்கள் 18 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெறுகின்றன.

அதன்படி, ராபின்சன் விளையாட்டு திடல் ராயபுரம், தீவுத்திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, அண்ணாநகர் கோபுரப்பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், செம்மொழி பூங்கா, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, அம்பத்தூர் எம்.வி.விளையாட்டு மைதானம், கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, வளசரவாக்கம் லேமேக்ஸ் பள்ளி வளாகம், தி.நகர் மாநகராட்சி மைதானம் நடேசன் பூங்கா எதிரில், கே.கே.நகர் சிவன் பூங்கா, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த இடங்களில், நாள்தோறும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *