செய்திகள்

சென்னை, கோவையில் தென்பட்ட சர்வதேச விண்வெளி மையம்: மக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர்

சென்னை, மே.11-–

வானில் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னை, கோவை மக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர்.

அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவை ஒன்றிணைந்து விண்ணில், சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த 1998-ம் ஆண்டு நிறுவியது.

இந்த விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விஞ்ஞானிகள் தங்கி இருந்து விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்த விண்வெளி நிலையத்தை பூமியில் இருக்கும் மக்கள் அடிக்கடி சாதாரண கண்களிலேயே பார்க்க முடியும். எந்த பகுதியில் தெரியும் என்பதை நாசா அடிக்கடி அறிவிப்பு செய்யும். அதன்படி இந்த விண்வெளி மையத்தை வருகிற 24-ந் தேதி வரை இந்தியாவின் 41 இடங்களில் இருந்து பொதுமக்கள் சாதாரண கண்ணில் நேரிடையாக பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை சென்னை மற்றும் கோவையில் இதனை பார்க்கலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. அது எப்போது பார்க்கலாம், எந்த நேரத்தில் தெரியும் என்பதனையும் நாசா தெரிவித்துள்ளது.

நேற்று சென்னை மற்றும் கோவையின் பல இடங்களில் விண்வெளி நிலையம் தெரிந்தது. சென்னையை பொறுத்தவரை இரவு 7.09 மணிக்கு தொடங்கி 7.16 மணி வரை என மொத்தம் 7 நிமிடம் தெரிந்தது. கோவையில் இரவு 7.08 மணிக்கு தொடங்கி 7.15 மணி வரை தெரிந்தது.

இந்த காட்சியை பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். அப்போது வானில் நட்சத்திரம் நகர்வதை போன்று அந்த நிகழ்வானது இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:-

விண்ணில் வலம் வந்து கொண்டு இருக்கும் விண்வெளி நிலையத்தை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பார்க்க முடியும். ஒரு பகுதியில் மாதத்துக்கு ஒரு முறை அல்லது வாரத்துக்கு பலமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நமது இருப்பிடத்தில் விடியற்காலை அல்லது அந்தி நேரத்தில் மட்டுமே அதனை பார்க்கலாம். அதற்கு நாம் இருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும் மற்றும் விண்வெளி நிலையம் தலைக்கு மேல் செல்ல வேண்டும்.

அதன்படி தான் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவையில் வருகிற 24-ந் தேதி வரை தெரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த விண்வெளி நிலையம் ஒரு விமானம் அல்லது வானத்தில் நகரும் மிகவும் பிரகாசமான நட்சத்திரம் போல் தெரியும். ஒரு விமானம் பொதுவாக 965 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆனால் விண்வெளி நிலையம், 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *