செய்திகள்

சென்னை கொளத்தூர் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.67 கோடியில் ‘செங்கை சிவம்’ பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை திறந்தார்

சென்னை, ஜூலை 2–-

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.67 கோடி செலவில் கட்டப்பட்ட செங்கை சிவம் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் ரூ.69 கோடியே 78 லட்சத்து 39 ஆயிரம் செலவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பூங்கா, நூலகக் கட்டிடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடங்கள் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘‘செங்கை சிவம் பாலம்’’ ஆகியவற்றை திறந்து வைத்தார்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம். காலனி 12–-வது தெருவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 3 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கவுதமபுரம் குடியிருப்பு பகுதி திறந்தவெளி நிலத்தில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.80.69 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, என்.ஆர்.இளங்கோ எம்.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரமணா நகர், கவுதமபுரத்தில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நூலகக் கட்டிடம் மற்றும் ரூ.74 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டிடங்கள், என மொத்தம் ரூ.1 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரம் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், திரு.வி.க. நகர் மண்டலம், புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதிகளை இணைக்கும் வகையில், ஸ்டீபன்சன் சாலையில் மூலதன மானிய நிதி மற்றும் இதரத் திட்டங்களின் நிதியின் கீழ் ரூ.52.90 கோடி செலவில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே பழுதடைந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு, 282 மீட்டர் நீளம் மற்றும் 22.70 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், 7.13 கோடி ரூபாய் செலவில் 548 மீட்டர் நீளத்தில் பாலத்திற்கான சாலை மற்றும் அணுகு சாலை, மையத்தடுப்பு, இருபுறமும் நடைபாதை, மையத்தடுப்பில் வண்ணப் பூக்களுக்கான செடிகள் நடுதல் போன்ற பணிகள், ரூ.6.80 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம் 830 மீட்டர் நீளத்தில் ரூ.66 கோடியே 83 லட்சம் செலவில் இப்புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

செங்கை சிவம் பாலம்

மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும், புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் இருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் நினைவைப் போற்றும் வகையில் ‘‘செங்கைசிவம் பாலம்’’ என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலம், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி பகுதிகளில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பயனடைவதோடு, நாள்தோறும் சராசரியாக சுமார் 70 ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்பெறுவர்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணைமேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குனர் எஸ்.கிருஷ்ணன், இயக்குனர் டி.என்.நிரஞ்சன் கனி, பொதுமேலாளர் டி.ரமேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *