ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு
சென்னை, ஜூன்.8-
சென்னை கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக சட்டசபையில் 30.3.2023 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கூவம் ஆற்றின் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.50 கோடி செலவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த பணிக்கான செலவுகள் குறித்த விவரங்களை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண் இயக்குனர், அரசுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், கூவம் நீர்வழிப் பாதையில் பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலை, ரிச்சி தெரு, நேப்பியர் பூங்கா, நாவலர் நகர், டிரஸ்ட் புரம் உள்ளிட்ட 23 இடங்களில் கழிவுநீர் வெளியேறும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கான தொகைக்கான புதிய நிர்வாக அனுமதியை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. மேலும், அரசின் முன் அனுமதியைப் பெறாமல் பணிகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.