வர்த்தகம்

சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ. 188 கோடியில் புதிய டெர்மினல்

சென்னை, ஆக. 16–

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கையாள்வதற்கான இரண்டாவது முனையம் (டெர்மினல்) ரூ.188 கோடி செலவில் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

காமராஜர் துறைமுகம் தற்போது ஆண்டுக்கு சுமார் 55 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 85 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனைப் பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொன்னேரி நெடுஞ்சாலை வல்லூர் கிராமத்திலிருந்து காமராஜர் துறைமுகம் வரை செல்லும் தெற்கு இணைப்புச் சாலைப் பணிகள் ரூ. 195 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ஜூன் 2022-க்குள் பணிகள் நிறைவடையும். ரூ.70 கோடி செலவில் இரட்டை ரெயில் பாதை பணிகள் வரும் மே 2022-க்குள் முடிக்கப்படும்.

தற்போது பலசரக்கு முனையம் மூலம் கார்கள் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்று வருகிறது. ரூ.188 கோடியில் புதிய முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் தற்போது 5 நிறுவனங்கள் பங்கேற்று விண்ணப்பித்துள்ளன. இதில் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் புதிய முனையத்தை அமைப்பதற்கான பணி உத்தரவு வழங்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக உயர் அதிகாரிகள் சஞ்சய், கிருஷ்ணசாமி, குணசேகரன், ராதாகிருஷ்ணன், பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *