சென்னை, அக்.8-–
சென்னை, கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் தோட்டக்கலை அருங்காட்சியகம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவுக்கு எதிரே செங்காந்தள் பூங்காவுக்கு அருகே 6.07 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா கட்ட திட்டமிடப்பட்டது.
பார்வையாளர்களின் மனதை வருடும் வகையில் அழகிய செடி-கொடி, மரங்கள், பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.46 கோடி செலவில் சிங்கப்பூர் கலைநயத்துடன் இயற்கை எழில்மிகு சூழலுடன் இந்த பூங்கா உருவானது.
இப்பூங்கா அமைக்கும் பணியை வேளாண்மை-–உழவர் நலத்துறையின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மேற்கொண்டது.
இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இப்பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையடுத்து பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவு உருவச்சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்தார். அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகத்துக்கு சென்று பறவைகளுக்கு தானியம் மற்றும் பழ வகைகளை வழங்கினார். பூங்காவை 1 மணி நேரத்துக்கு மேலாக சுற்றி பார்த்து சிறப்பு அம்சங்களை ரசித்தார்.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட அமைச்சர்களும், மேயர் பிரியா, தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், வேளாண்மை- உழவர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மைத்துறை இயக்குனர் முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூங்காவின் சிறப்பு அம்சங்கள்
பசுமைக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று இந்த பூங்கா உலகத்தரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இந்தியா விலே முதல் முறையாக ‘ஹோலோகிராப்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தொடு திரை மலர்கள் (தீம் அன்ரியல்) 360 டிகிரி அறையும் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது. இந்த திரையில் உள்ள மலரை தொட்டால் பூத்துக்குலுங்கும். மலர்கள் சிதறுவது போன்று நவீன தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
120 அடிக்கு செயற்கை பனி மூட்ட பாதை, 2,600 சதுரடியில் ஆர்க்கிட் குடில், அரிய வகை பூச்செடிகளுடன் 10 ஆயிரம் சதுரடி பரப்பில் பிரமாண்ட கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகள் வசிக்கும் பறவையகம், இசைக்கு நடனமாடும் செயற்கை நீரூற்று, லேசர் ஒலி, ஒளி காட்சி அமைப்பு, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், பாரம்பரிய காய்கறி தோட்டம் போன்றவைகள் பார்வைகளின் கண்களுக்கு படைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது 14.8.1966 அன்று திறந்து வைக்கப்பட்ட காந்தியின் முழு உருவச்சிலையும் பூங்காவில் கம்பீரமாக நிற்கிறது.
கேரளா மாநிலம் வயநாடு சுற்றுலாத்தலத்தில் இருப்பது போன்று கம்பியில் தொங்கியபடி (ஜிப்லைன்) பூங்காவை சுற்றி வரும் வசதி தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை சுற்றி பார்த்து திரும்பும்போது குட்டி ஊட்டிக்குள் சென்று திரும்பியது போன்ற உணர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.