தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை, மே 15
கடற்கரை–திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரெயில் விரைவில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை 19 ஆண்டுகளுக்கு பின்னர் மே 2ந் தேதி முதல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50க்கு சென்னை வந்தடையும். சுமார் 6 மணி நேரம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரெயிலில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரெயிலில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்ல கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைவாகவும், ரெயிலில் விரைவாகவும் செல்லலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேபோல, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல இந்த ரெயிலை அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இந்த மின்சார ரெயிலில் கழிவறை வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 6 மணி நேரம் இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த ரெயிலில் ஒவ்வொரு பெட்டிலும் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கழிவறையுடன் கூடிய மின்சார ரெயில் பெட்டிகள் இந்த ரெயிலில் இணைத்து இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கழிவறையுடன் கூடிய மின்சார ரெயில்கள் பெட்டி தயாரிக்கும் பணி பெரம்பூர் ஐ.சி.எப்.பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பெட்டிகள் முழுமை அடைந்தவுடன் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரெயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.