சென்னை, மார்ச் 15–
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் 2 ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏ.சி. ரெயில் விடுவது தொடர்பாக ரெயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
இதையடுத்து தலா 12 ரெயில் பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் ஒதுக்கியது.ஏ.சி.ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐ.சி.எப்.பில் நடந்து வருகிறது. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.சி.மின்சார ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும். அதன் பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.