நாளை அதிவேக ரயில் சோதனை
சென்னை, மார்ச்.8–
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4–வது ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் 4–வது வழித்தடம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை–எழும்பூர் இடையே 4.50 கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4–வது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் தொடங்கியது. இந்த பணிகள் காரணமாக கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த பணிகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடித்து, ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர், நிலத்தைப் பெற்று, பணிகள் மீண்டும் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதேநேரத்தில், 4-வது வழித்தடத்தில் தண்டவாளம், சிக்னல் அமைப்பு மற்றும் மின்சாதனம் நிறுவுதல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தட பணிகள் தற்போது 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும், கோட்டை – பூங்கா ரெயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணியும் முடிவடைந்தது. இந்த வழித்தடத்தை தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரையில் எழும்பூர் – கடற்கரை இடையே உள்ள புதிய 4–வது வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. புதிய 4–வது வழித்தடத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா? எவ்வளவு வேகத்தில் இயக்கலாம் என்பது அறிய இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. குறைபாடு இருக்கும் பட்சத்தில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ரெயில் பாதையை ஆய்வு செய்வதற்காக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்திரி நாளை (ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளதாகவும், அவரது ஒப்புதலுக்கு பிறகு, 4–வது வழித்தடத்தில், ரெயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.