செய்திகள்

சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் கோலாகல குடியரசு தினவிழா

தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்

ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

சென்னை, ஜன.26–

நாட்டின் 75–வது குடியரசு தினத்தையொட்டி இன்று சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே மூவர்ண தேசிய கொடியை தமிழக கவர்னர் ரவி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடியரசு தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்தப் பகுதியில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த ஆண்டு குடியரசு தினவிழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் முக்கியஸ்தர்கள் அமர்வதற்காக சாலை ஓரத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்ந்தனர். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ முதலமைச்சர் அழைத்து வரப்பட்டார்.

பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

கவர்னரை வரவேற்ற முதலமைச்சர்

காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அவரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.

பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

அணிவகுப்பு

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து கவர்னர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் தேசியக்கொடிக்கு ‘சல்யூட்’ செய்தபடி நின்றனர்.

பின்னர் ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்பட்டன.

அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர்.

பதக்கங்களை வழங்கினார்

முதல்வர்

அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வந்தன. முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *