சென்னை, ஜன.31–
சென்னை ஐ.சி.எப்–ல் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் 69வது ரெயில்வே வார விழா தெற்கு ரயில்வே சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் 38 பிரிவுகளில் சிறப்பாகப் பணிபுரிந்த ரெயில்வே கோட்டங்கள் மற்றும் பணிமனைகளுக்கு விருதுகள் வழங்கினார்.
ரெயில்வே கோட்டங்களுக்கு இடையே சிறப்பாகப் பணிபுரிந்ததில் திருச்சி ரெயில்வே கோட்டம் முதலிடத்தையும், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்கள் 2-–ம் இடத்தையும் பிடித்தன.
தொடர்ந்து பொறியியல், வணிகம், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, மருத்துவம், பாதுகாப்பு, பயிற்சி மையம், ரயில்வே பள்ளி, மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாகப் பணிபுரிந்த ரயில்வே கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், ரெயில்வே துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 26 அதிகாரிகள் மற்றும் 71 பணியாளர்கள் என 97 பேருக்கு ‘விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா’ எனும் தனிநபா் விருதும் வழங்கப்பட்டன. இதில், வந்தே பாரத் ரயிலை வெற்றிகரமாக பராமரித்து வரும் நெல்லை ரயில் நிலைய முதுநிலை பொறியாளர் மந்திரமூர்த்திக்கு விருது வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருது பெற்ற நிலையில் தற்போது அவர் 2–வது முறையாக விருது பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து ரயில்வே பள்ளியில் பயின்று 10 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற இரு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏஜிஎம் கவுல் கிஷோர், பிசிபிஓ ஸ்ரீஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் பூங்கா நகரில் உள்ள ரயில்வே கோட்ட வளாகத்தில் நடைபெற்ற 69–வது ரயில்வே வார விழாவில் சிறப்பாகப் பணிபுரிந்த 71 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா விருது வழங்கினார்.
நிகழ்வில் தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கௌசல் கிஷோர், முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி ஹரிகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.