செய்திகள்

சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தலை ஏற்று 19–ந்தேதி வரை வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினார்கள்

சென்னை, ஜன.11-

பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியதை ஏற்று வேலை நிறுத்தப்போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அனைவரும் இன்று பணிக்கு திரும்பினார்கள்.

அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது.

போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவுக்கு இடையிலான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பல்வேறு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாததால், ஓரளவு பஸ்கள் ஓடின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் இந்த போராட்டம் தொடர்ந்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கிதியோன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., நேதாஜி போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயண், பட்டாபி ரகுராமன், வக்கீல்கள் பாலன் ஹரிதாஸ், சி.கனகராஜ், ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, ‘தமிழ்நாட்டின் முக்கியமான பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வருகிற 19ந்தேதி வரை இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் தற்காலிகமாக 92 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்தை தற்போது வழங்கிவிட்டு பின்னர் கழித்துக்கொள்ளட்டும்” என்று யோசனை தெரிவித்தனர்.

ஆனால் இதை இருதரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு நீதிபதிகள், “இருதரப்பும் இப்படி பிடிவாதம் காட்டினால் எப்படி?” என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வருகிற 19ந்தேதி வரை இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் வேலைக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் அரசு எடுக்கக்கூடாது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மீண்டும் வேலைநிறுத்தம்

அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலகண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை 19-ந்தேதி வரை ஒத்திவைக்க ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பொங்கலுக்கு பஸ்களை ஓட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர். ஆனால் அரசு தொழிலாளியை பற்றி கவலைப்படாமல் விடாப்பிடியாக இருக்கிறது. இருந்தாலும், 19ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அன்றிலிருந்து வேலைநிறுத்தம் தொடரும் என்றார்.

சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பஸ் ஊழியர்கள் பரீசிலித்த எங்கள் கூட்டமைப்பினர், நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு, அதைவிட முக்கியமாக பொதுமக்களின் சிரமங்களையும் கருத்தில்கொண்டு, பொங்கல் வருவதால் அதனையும் கருத்தில் கொண்டு, எங்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று நாங்கள் முடிவெடுத்து உள்ளோம். 19ந்தேதியும் இதே கோரிக்கையைதான் வலியுறுத்துவோம். அந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஆர்பாட்டம், போராட்டம் போன்றவற்றை அமைதி வழியில் தொடருவோம். தேவைப்பட்டால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *