செய்திகள்

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக அதிகரிப்பு

சென்னை, ஏப். 23–

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அனைவருக்கும் சோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,

சென்னை ஐஐடியில் இதுவரை 1,470 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய்ப் பரவல் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 55 பேருக்கும் குறைவான அளவு பாதிப்புதான் உள்ளது. நோய் பாதித்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான தொண்டை எரிச்சல் உள்ளது. தமிழகத்தில் இதுவரை எக்ஸ் இ திரிபு கண்டறியப்படவில்லை என்றார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் என்ற உத்தரவு மீண்டும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.