சென்னை, மே.20-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெலுங்கானாவை சேர்ந்த தம்பதிகளிடமிருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தை 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டம், நர்மெட்டா மண்டலம், தரிகோப்புலா பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்ததும் இந்த குழுவினர் நேற்று காலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இந்த குழுவினர் நேற்று மாலை 6.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சார்மினார் செல்லும் ரெயிலில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். இதனால், அவர்கள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓய்வெடுத்த நேரத்தில், சிந்தலா சன்னி (வயது 33) – பிரசாந்தி சன்னி (31) என்ற தம்பதியின் 3 வயது குழந்தை ஜோயல் கையில் செல்போனை விளையாடியபடி மதியம் 12.30 மணியளவில் ஓய்வறையை விட்டு வெளியே வந்துள்ளது.
குழந்தை தனியாக வெளியே வந்ததை பார்த்த மர்மநபர் குழந்தையின் கையில் இருந்த செல்போனை திருடுவதற்கு திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார். குழந்தை மாயமானதை அறிந்த சுற்றுலா குழுவினர், எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் குழந்தை ஒன்று தனியாக விடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த பேசின் பிரிட்ஜ் போலீசார் குழந்தையை மீட்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த குழந்தை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மாயமான குழந்தை ஜோயல் என்பதை அறிந்த போலீசார் உடனடியாக எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்த பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய மர்மநபர் செல்போனை திருடிச் சென்றுவிட்டு குழந்தையை மட்டும் விட்டுச் சென்றுள்ளான். போலீசார் விரைந்து விசாரணை நடத்தி 5 மணி நேரத்தில் குழந்தையை மீட்டுள்ளனர்.