செய்திகள்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த 30–ந் தேதி வரை கால அவகாசம்

சென்னை, ஜூலை.16-

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த வருகிற 30-–ந் தேதி வரை பணம் கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

-கொரோனா காலத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் அதிகமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மின்கணக்கீடு செய்ததில் 4 மாதத்திற்கான மொத்த நுகர்வின் அடிப்படையில் அதிகப்படியாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சில ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டன.

மின் கட்டணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதன் விசாரணை முடிந்து நேற்று (15–ந் தேதி) உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 4 மாத காலத்திற்கான மின் நுகர்வை இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரித்து கணக்கீடு செய்தது நியாயமானது மற்றும் முறையானது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு செய்ததால்தான் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான கணக்கீட்டிலும், தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும் அது அவர்களின் வெளிப்படைத் தன்மையை காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கீடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில் கீழ்க்கண்ட விளக்கங்கள் மீண்டும் அளிக்கப்படுகிறது.

* 4 மாத காலத்திற்கான மின்நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளது.

* அந்த மின்நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கணக்கீடு செய்யும்பொழுது அதில் தனித்தனியே ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, செலுத்தவேண்டிய தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

* அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே 2020 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக்கீட்டில் அந்தத்தொகை சரிசெய்யப்படும்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி தேதி 25.3.2020 முதல் 14.7.2020 வரை இருப்பின், அவர்களுக்கு 15.7.2020 வரை ஏற்கனவே கட்டணம் செலுத்த கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த கடைசி தேதி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு வரும் 30.7.2020க்குள் அவர்கள் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் தங்கள் பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *