செய்திகள்

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீபாவளிக்குள் 5ஜி சேவை அறிமுகம்

முகேஷ் அம்பானி அறிவிப்பு

புதுடெல்லி, ஆக.30-

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

தற்போது 4ஜி இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது. அடுத்த தலைமுறையான 5ஜி சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 5ஜி அலைக்கற்றை சில வாரங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.

ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு அந்த அலைக்கற்றை ஏலம் போனது. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரூ.88 ஆயிரத்து 78 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்தநிலையில், ஜியோ 5ஜி சேவையை தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை இன்னும் 2 மாதங்களில், அதாவது தீபாவளிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாதமும் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும். இன்னும் 18 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நாட்டின் ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு தாலுகாவிலும் ஜியோ 5ஜி சேவை அமலுக்கு வந்து விடும்.

நாடு முழுமைக்குமான ஜியோ 5ஜி நெட்வொர்க்குக்காக ரூ.2 லட்சம் கோடி முதலீட்டை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளோம்.

மற்ற 5ஜி சேவைகளைப் போலின்றி, ஜியோ 5ஜி சேவை தனித்துவம் கொண்டதாக இருக்கும். 4ஜி சேவையை சார்ந்திருக்காது. அதிநவீனம், தரம், மலிவு, அதிக பரப்பளவு வீச்சு ஆகிய அம்சங்களுடன் திகழும். உலகிலேயே மிகப்பெரிய, மிகவும் முன்னேறிய 5ஜி நெட்வொர்க்காக இருக்கும்.

நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். ஜியோவின் உண்மையான 5ஜி சேவைக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.