குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு
டெல்லி, மே 27–
மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை,
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் டி.ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த வைத்திய நாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
கொலீஜியம் பரிந்துரை
ஆறு மாதங்களாக, உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி இல்லாத நிலையில், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதனைத்தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.