தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வேட்டை
சென்னை, ஏப்.14-
சென்னை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வாகன சோதனையில் வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு, ஆங்காங்கே தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ரூ.50 ஆயிரத்துக்கு மேல், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் ரொக்கப்பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுச்செல்லலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்படும். அவர்களும் இதுபற்றி விசாரிப்பார்கள். இதுபோன்ற சோதனைகள் மூலம் இதுவரை ஏராளமான பணம், தங்க நகைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாகனங்கள் கூட இந்த சோதனைக்கு தப்பவில்லை.
இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் அருகே வண்டலூர் – -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெட்டக வசதியுள்ள வேனை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அந்த வேனில்1,425 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பதாகவும், விமான நிலையத்தில் இருந்து குடோனுக்கு கொண்டு செல்வதாகவும் வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வேனை பறிமுதல் செய்து, அதனை ஸ்ரீபெரும்புதூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அந்த தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1,035 கோடியே 44 லட்சம். தற்போது அந்த வேன், ஸ்ரீபெரும்புதூர் சப்-கலெக்டர் அலுவலக வளாக கருவூல அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ரூ.1,035 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.