புதுடெல்லி, ஜூலை 23-–
சென்னை அருகே அமைக்கப்பட உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் 2-வது விமான நிலையமாக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கான அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் வழங்கி இருந்தது.
மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநிலங்கள வையில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
இது தொடர்பாக எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் கூறியதாவது:-
பசுமைவெளி விமான நிலைய கொள்கை 2008-ன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசின் டிட்கோ சார்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைகளுக்குப்பின், பசுமைவெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு முன்பு இந்த பரிந்துரை வைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்த வழிகாட்டுதல் குழு, பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்து 9.7.2024-ம் தேதி பரிந்துைரத்து உள்ளது.
பசுமைவெளி விமான நிலைய கொள்கைகளின்படி, நிதியளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட விமான நிலைய திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவை சார்ந்தது.
இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்ேமாகன் நாயுடு தனது பதிலில் கூறினார்.