போஸ்டர் செய்தி

சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.1.57 கோடியில் அதிநவீன கதிரியல் கருவி; யோகா, தியான கூடம்

சென்னை, பிப்.9–

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கல்லீரல் மற்றும் பித்தவியல் நிலையத்தில் அதிநவீன கதிரியல் இடையீடு தொகுப்பகம் மற்றும் யோகா, தியானக் கூடத்தினை திறந்து வைத்து, மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்ட கை சுத்தகரிப்பானை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:–

அம்மாவின் அரசில் தமிழக அரசு மருத்துவமனையில் முதன் முறையாக இன்று இக்கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் பகுதியில் உள்ள மற்ற உறுப்புகளை மறைத்து ரத்த குழாய் பிம்பத்தின் நிலைகளை மட்டும் கண்டறிய முடியும். ஆரம்ப நிலை கல்லீரல் நோய்களை கண்டறிதல், கல்லீரல் நோய்கள் மற்றும் கட்டிகளுக்கு சிகிச்சை, Percutaneous Trans Hepatic Billiary Drainage போன்ற சிகிச்சைகள், பித்தப்பை கற்களை அகற்றுதல், கல்லீரல் மற்றும் பித்தப்பபை stenting சிகிச்சைகள் மற்றும் பயாப்சி எடுப்பதற்கு இக்கருவி பயன்படுகிறது.

இதன் மூலம் கல்லீரல் நோய்களுக்கு நுண்துளை சிகிச்சை மற்றும் குறைந்த அளவில் சிறந்த சிகிச்சை, நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைதல், ரத்த இழப்பு குறைப்பு, மற்ற உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்படும்.

தனியார் மருத்துவமனையில் ரூ.5லட்சம்

தனியார் மருத்துவமனைகளில் ரூ.5லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முறைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

மேலும், சென்னை அரசு பொதுமருத்துவமனையில் நோயாளிகளுக்கும், அவர்களது உடனாளிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மனக்கவலைகளை குறைத்திடவும், உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் காலையும், மாலையும் யோக பயிற்சியும், தியான பயிற்சியும் பயிற்றுவிக்க 2,500 சதுரடி பரப்பளவில் யோகா மற்றும் தியான கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. கூடத்தில் யோகா செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு படங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த யோகா மற்றும் தியான பயிற்சிகளை செயல்முறைகபயிற்சி அளிக்கப்படும்.

கை சுத்திகரிப்பான்கள் 

மேலும், நோய் தொற்று என்பது ஒருவரிடமிருந்தோ, பொருள்களிலிருந்தோ கைகளில் மிகவும் வேகமாக கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். அதன் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கைகளை அடிக்கடி கழுவுவது மிக அவசியமாகும். இதற்காக அரசு பொது மருத்துவமனையின் ஒர் அங்கமான மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்தவர்களால் கை சுத்திகரிப்பான் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கிருமி நாசினிகள் மற்றும் சரும நோய் பாதிப்பிற்கான பலகட்ட ஆய்வுகளைக் கடந்து பயன்பாட்டிற்கு ஏற்றது என சான்றளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, மருந்தியியல் கல்லூரி முதல்வர் ஜெரார்டு சுரேஷ், யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை தலைவர் அம்பிகா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *