சென்னை, ஜன. 24–
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 9 ந்தேதி துவக்கி வைக்கப்பட்ட திருக்குறள் ஓவியக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் ஒரு வாரம் வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென்கோடியான கன்னியாக்குமரியின் கடலுக்குள், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரத்தின் அடிப்படையில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் நிறுவப்பட்டு, 2000 வது ஆண்டு ஜனவரி 1 ந்தேதி திறந்து வைக்கப்பட்டது. அதனுடைய வெள்ளி விழாவையொட்டி, திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 30,31, ஜனவரி 1 ந்தேதி என 3 நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கண்ணாடி பாலத்தை திறந்து வைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலையின் 25 வது ஆண்டையொட்டி, திருக்குறளின் 133 அதிகாரத்தையும் மையப்படுத்தி, 133 ஓவியங்கள் வரையப்பட்டது. அந்த ஓவியங்களை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகத்தை சேர்ந்த ஓவியர்களாலும் வரையப்பட்ட ஓவியங்களின் திருக்குறள் ஓவிய கண்காட்சி, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள வளர்கலைக் கூடத்தில் கடந்த 9 ந்தேதி திறந்து வைக்கப்பட்டது. 23 ந்தேதி வரையில் திருக்குறள் ஓவிய கண்காட்சியை கண்டு களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரு வாரம் நீட்டிப்பு
மேலும் இந்த ஓவியக் கண்காட்சி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. சிறப்பு வாய்ந்த அந்த ஓவியங்களை, பொதுமக்கள் கலை ஆர்வலர்கள் ஏராளமானோர் கண்டுகளித்து வந்தனர். இந்நிலையில் 23 ந்தேதியோடு ஓவிய கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில், பொதுமக்கள், மாணவர்களின் ஆர்வம் காரணமாக கண்காட்சியை மேலும் ஒரு வாரத்திற்கு மேல் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்லூரி, பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையொட்டி, அரசு அருங்காட்சியகத்தின் இயக்குநர் கவிதா ராமு ஐஏஎஸ் நேற்றும் வந்து ஓவிய கண்காட்சியை பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார். அப்போது, திருக்குறள் ஓவிய கண்காட்சிக்கான ஓவியங்களை ஓவியர்களிடம் வரைந்து வாங்கி, கண்காட்சியை ஒருங்கிணைதுள்ள ஓவியர் ஏ.எம்.ஜாபர் டி.எப்.ஏ., கவிதா ராமு ஐஏஎஸ்க்கு திருக்குறள் கலைஞர் உரையை வழங்கி வரவேற்றார். நிகழ்ச்சியில், ஓவியங்களுக்கான கருத்துரைகளை வழங்கிய கவிஞர் கலைச்செல்வி புலியூர்கேசிகன், எழுத்தாளர் புனித ஜோதி, துணை இயக்குநர்கள் சுந்தர்ராஜன், பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.