செய்திகள் முழு தகவல்

சென்னை அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலைக்கு:ஒளவை நடராசன் பெயர்

Makkal Kural Official

சென்னை, ஆக 30–

தமிழறிஞர் ஒளவை நடராசன் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணாநகர் கிழக்கு (ஜே 82) 2வது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றிட அரசின் அனுமதி பெறப்பட்டது.

செய்யாறில் உலகம்மாள் − உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி பிறந்தவர் ஒளவை நடராசன். தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் பள்ளிப் படிப்பையும், மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

கல்லூரி காலத்தில் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். உவமைக் கவிஞர் சுரதா ‘பாதி அண்ணாதுரை’ என்று இவரைப் பாராட்டி பாடல் எழுதும் அளவுக்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டு தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தனது புலமையை வளர்த்துக் கொண்டவர்.

அவர் பெற்ற தமிழ்ப் புலமையால் கல்லூரிகளில் விரைவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் அரசியல் தலைவர்களாகவும், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கல்வியாளர்களாகவும், இலக்கிய ஆளுமையாளர்களாகவும் இன்றளவும் தடம் பதித்து வருகின்றனர்.

கல்விப் பணிகளில் மட்டுமின்றி நிர்வாகப் பணிகளிலும் தனது ஆளுமையை நிரூபித்த ஒளவை நடராசன் செய்தித்துறையின் துணை இயக்குனராகவும், மொழியெர்ப்புத் துறை இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சித்துறையின் செயலராகவும், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் முத்திரை பதித்து முத்தமிழறிஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 3 முதலமைச்சர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரரர்.

பேரறிஞர் அண்ணாவின் பன்முகம் என்னும் தலைப்பில் நூலைப் படைத்துள்ளார். இலங்கை கம்பர் கழகத்தின் சார்பில் ‘தன்னேரிலாத தமிழ் மகன்’ விருதும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருதும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதும், இவரது வாழ்நாள் சாதனைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதும் தமிழறிஞர் ஒளவை நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *