செய்திகள் போஸ்டர் செய்தி

சென்னையை தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சலூன் கடைகளுக்கு அனுமதி

Spread the love

சென்னையை தவிர

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சலூன் கடைகளுக்கு அனுமதி

அழகு நிலையங்களும் செயல்படலாம்

எடப்பாடி பழனிசாமி உத்தரவு

 

சென்னை, மே 23–

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் நாளை முதல் இயங்கலாம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்.

தற்போது, முடி திருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் 24.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

அழகு நிலையங்களுக்கும் அனுமதி

ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரக பகுதிகளில் தற்போது அழகு நிலையங்களும் 24.5.2020 முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நிலையங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.

முககவசம்

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன். குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது. மேலும், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *