செய்திகள்

சென்னையைச் சேர்ந்த கவிஞருக்கு ஜெர்மனி நாட்டின் இலக்கிய விருது

பெர்லின், செப். 21–

தமிழ்நாட்டுக் கவிஞரும், எழுத்தாளருமான மீனா கந்தசாமிக்கு இந்த ஆண்டுக்கான ‘பென் ஜெர்மனி’ (PEN Germany) என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் மீனா கந்தசாமி. இவரது இயற்பெயர் இளவேனில். கவிதைகளின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக தனது பெயரை மீனா என மாற்றிக் கொண்டார். எழுத்தாளரும், செயற்பாட்டாளரும், மொழிபெயர்ப்பாளருமான இவரது படைப்புகள் பெண்ணியத்தையும், இந்தியாவின் சமகால சாதியொழிப்புப் போராட்டத்தையும் பேசுபவையாக உள்ளன. இவர் டச், மெஸ்.மிலிட்டன்சி என்ற இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

பென் ஜெர்மனி விருது

மீனா கந்தசாமி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக-மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதில் எழுதிய முதல் கவிதை ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றியதாகும். ‘ஜிப்சி காடெஸ்’ என்ற இவர் எழுதிய ஆங்கிலப் புதினம் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்தது. When I Hit You, Exquisite Cadavers ஆகிய புதினங்களையும் படைத்துள்ளார்.

மேலும், தமிழில் இருந்தும் பல உரைநடை மற்றும் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஓராள்போக்கம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மீனா கந்தசாமி நடிகையாக அறிமுகம் ஆனார். இவருக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் பொற்கிழி விருது அண்மையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீனா கந்தசாமிக்கு மதிப்புமிக்க ‘பென் ஜெர்மனி’ (PEN Germany) விருது கிடைத்துள்ளது. இது PEN மையம் சார்பாக ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு ஜெர்மன் இலக்கிய விருதாகும். துன்புறுத்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சிறந்த முயற்சிகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாவலாசிரியரும், நாடக ஆசிரியருமான ஹெர்மன் கெஸ்டனின் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. ஜெர்மனி அரசுக்குச் சொந்தமான டிடபிள்யூ நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *