தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு
சென்னை, செப். 24–
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கண்டறிந்து, விசாரணை செய்தனர். இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஹமீது உசேன், அவர் சகோதரர் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர். கெளரவ பேராசிரியராக பணியாற்றி வந்த ஹமீது உசேன், ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்க ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. இந்த வழக்குத் தொடர்பாக 10 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான ஆவணங்களை கைப்பற்றினர். சைபர் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கில், தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததால் வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு விரைவில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இச் சட்டப்பிரிவுகளை ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டால், அந்த வழக்கின் விசாரணையை என்ஐஏ நேரடியாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு அண்மையில் மாற்றப்பட்டு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சென்னை என்ஐஏ அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.என்ஐஏ சோதனை: சர்வதேச தொடர்புகள் இந்த வழக்கில் இருப்பதாக என்ஏஐ சந்தேகிப்பதால், விரைவில் இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் 9 இடங்கள் உள்பட தமிழ்நாட்டில் 14 இடங்களில், இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல மணி நேரமாக நடைபெறும் இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
இந்த நிலையில், கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக உள்ள கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முகமது அலி அலிம்ஷா என்ற நபர், தடை செய்யப்பட்ட ‘ஹிஜாப் உத் தஹிஹீர்’ என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது. .இதையடுத்து சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்றடைந்த என்ஐஏ அதிகாரிகள் குழுவினர், நாகர்கோவில், கோட்டாறு இளங்கடை புதுத்தெருவில் உள்ள இமாமின் 2-ஆவது மனைவியின் வீட்டில் இன்று அதிகாலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இளங்கடை பகுதியில் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த தெருவுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது.