செய்திகள்

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, மார்ச் 16-

இந்தியாவில் முதல் முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

44வது பிடே செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழக அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

முதலமைச்சரின் சீரிய முயற்சி

நடந்து கொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக ரஷ்யாவில் இருந்து இந்தப் போட்டியை வெளியேற்றுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்த பிறகு, இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற பல நாடுகள் முயற்சித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு சாத்தியமானது.

1927ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்தப் போட்டியில் முந்தைய 43 செஸ் ஒலிம்பியாட்டை இந்தியா ஒருமுறை கூட நடத்த வாய்ப்பு அமையவில்லை. 44வது செஸ் ஒலிம்பியாட் 2022அம் ஆண்டுக்கான ஏலத்தை வென்றதில் தமிழக அரசு மகிழ்ச்சியடைகிறது. இந்தப் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர் – வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உத்தேசமாக ஜூலை 26ந் தேதி முதல் ஆகஸ்டு 8ந் தேதி வரை சென்னையில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது தமிழகத்துக்கு பெருமையான நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து வரும் ராஜாக்களையும், ராணிகளையும் சென்னை நகரம் அன்போடு வரவேற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.