Uncategorized

சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரச்சாரம்

சென்னை, ஏப்.15-

சென்னையில் 3 தொகுதிகளிலும் விஜயகாந்த் இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார்.

அண்ணா தி.மு.க.– தே.மு.தி.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நேரத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், தன்னால் பேச இயலவில்லை என்பதை நிருபர்களுக்கு கை சைகை மூலம் விஜயகாந்த் வெளிப்படுத்தினார். விஜயகாந்த் சார்பாக அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தான் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அண்ணா தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடப்பதாகவும், இதில் தர்மம் வெற்றி பெறும் என்றும், 40 இடங்களிலும் அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தே.மு.தி.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் விஜயகாந்த் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை ஓயும் நிலையில், விஜயகாந்த் சென்னையில் 3 தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார். தே.மு.தி.க. நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பை கேட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதன்படி, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் வேன் மூலம் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *