அனுமதி இலவசம்
சென்னை, ஜூன் 26–
‘எம்பசி ஆஃப் மியூசிக்கல் மாஸ்டர்’ என்னும் பெயரில் அருமையான இசை விருந்து படைக்கவிருக்கிறார்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீயூசிக் ஹவுஸ் இளைஞர்கள் குழு. சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் – கலாச்சார மையத்தில் இம்மாதம் 29ந் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பியானோ கலைஞர் வி.பெட்ரோவ், ‘செல்லோ’ இசைக் கலைஞர் போல்கோன்ஸ்கயா, கிளாரினட் கலைஞர் யூசுபோவ் ஆகியோர் முன்நின்று இசை விருந்து படைக்கவிருக்கிறார்கள்.
ரஷ்யாவின் பிரபல இசையமைப்பாளர்கள் தத்செய்கோவ்ஸ்கி, ராக்மனிநோவ், முசோர்க்ஸ்க்கி உள்ளிட்டோரின் இசையில் உருவான பாடல்களை இவர்கள் இசைத்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
ரஷ்ய நாட்டின் செவ்வியல் இசையின் அருமை – மகிமை –தாக்கம் – அதன் செழிப்பான கலாச்சார் பாரம்பரியத்தின் பெருமையைப் பேசும் விதத்தில் ஒவ்வொரு பாடலும் அமைந்திருக்கும்.
இளம் கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் இசைப் பயணம் மேற்கொண்டு ரஷ்ய இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்து வருகிறார்கள். அதில் ஒரு கட்டம் இவர்களின் சென்னை விஜயம்.
விடாலி பெட்ரோவுக்கு 21 வயது. அற்புதமான பியானோ கலைஞர். ஒவ்வொரு நிமிடமும் இன்னொரு உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் உத்தியை இசையில் வடித்து பார்வையாளர்களை வசீகரிக்க வைக்கும் திறமைமிக்கவர்.
இதேபோல வாஸ்கென் யுசுபோவ்க்கும் 21 வயது தான். இவர் கிளாரினெட் கலைஞர்.
மரியா போல்கோன்ஸ்கயாவுக்கு வயது 20. ‘செல்லோ’ கலைஞர். இவர்கள் கூட்டணியிசை, சென்னை வாழ் இசை ரசிகர்கள் – பிரியர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
ரஷ்ய இளைஞர்களின் இன்னிசை மழையில் நனையலாம், இசை வெள்ளத்தில் மிதக்கலாம். அனுமதி இலவசம்.