சென்னை, ஜன.10-
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 100-க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 443 ஆண்கள், 318 பெண்கள் என மொத்தம் 761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 218 பேரும், கோவையில் 69 பேரும், சேலத்தில் 52 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 3 பேரும், நீலகிரியில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் நேற்று சென்னையை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் 100-க்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 44 லட்சத்து 54 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நேற்று ஒரே நாளில் 65 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 882 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 7 ஆயிரத்து 304 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் இருவரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 7 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,215 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.