செய்திகள்

சென்னையில் 213 டன் தீபாவளிப் பட்டாசுக் குப்பையை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்

Makkal Kural Official

சென்னை, நவ. 2

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு முதலே தெருக்களில் பட்டாசுகளை வெடித்தனர். அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசுகளின் குப்பைக் கழிவுகள் வீதிகளில் குவிந்து கிடந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் பட்டாசு குப்பை சாலைகளில் நிரம்பியிருந்தது.

இந்தக் குப்பையை அகற்றும் பணிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நாளொன்றுக்கு வழக்கமாக 5,500 டன் குப்பை சென்னையில் சேகரிக்கப்படும் நிலையில், பட்டாசு வெடித்ததில் கூடுதலாக குப்பை குவிந்திருந்தது. இந்த குப்பையை பாதுகாப்பாக தரம் பிரித்து மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிச்சென்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகரில் தீபாவளி முதல் நேற்று மாலை 4 மணி வரை மொத்தமாக 213.61 டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வளசரவாக்கம் பகுதியில் 21.69 டன்னும் தேனாம்பேட்டையில் 20 டன் பட்டாசு குப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

அதேபோல அண்ணாநகர் மண்டலத்தில் 19 டன், அம்பத்தூர் 18.72 டன், கோடம்பாக்கம் 18.50 டன், திருவொற்றியூர் 17.45 டன், அடையாறு 15.24 டன், பெருங்குடி மண்டலத்தில் 13.81 டன் குப்பை அகற்றப்பட்டது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 3.73 டன் பட்டாசு குப்பை சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு சென்னை முழுவதும் சேகரிக்கப்பட்ட பட்டாசு குப்பை தரம் பிரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி, பெருங்குடி, கொடுங்கையூர் மாநகராட்சி கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *