செய்திகள்

சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி: இந்தியாவில் பாதிப்பு 7ஆக உயர்வு

Makkal Kural Official

நாக்பூர், ஜன. 7–

சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது.

இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு மீண்டனர். அதன் பிறகு படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துபோனது.

இந்த நிலையில், தற்போது சீனாவில் எச்.எம்.பி.வி. என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வகை வைரஸ் குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் கேரள மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் அதிகம் வசிப்பதால் அந்த மாநில அரசுகள் இந்த தொற்றுப் பரவலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அறிவித்தன.

இந்த நிலையில் இந்த தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கிய சூழலில், நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது. இதில், இந்தியாவில் தொற்று பாதிப்பு எதுவும் அதிகரித்து காணப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், கர்னாடகாவின் பெங்களூரு நகரில் நேற்று 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்தது. இதன்படி, பேப்டிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதியானது. இதேபோன்று, கடந்த 3-ந்தேதி 8 மாத ஆண் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை குணமடைந்து வருகிறது. இந்த 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததற்கான கடந்த கால பின்னணியும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதேபோல் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையிலும் பாதிப்பு

சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஒரு குழந்தைக்கும், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு…

இந்நிலையில், நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

நாக்பூர் நகரில் ராம்தாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். இதில், பரிசோதனைக்கு பின்னர் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதியாகி உள்ளது.

7 மற்றும் 14 வயதுள்ள 2 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனால், அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, தொற்று எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில், மகாராஷ்டிராவில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அச்சப்பட வேண்டாம் என்றும் மகாராஷ்டிர சுகாதார துறை கேட்டு கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *