செய்திகள்

சென்னையில் 1,948 விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கடலில் கரைப்பு

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை, செப். 25–

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 1,948 விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

18–ந் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காவல்துறை அனுமதி பெற்று, சென்னை பெருநகர காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் 2,148 விநாயகர் சிலைகள் நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடித்து வழிபாடு செய்யப்பட்டது. வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று முன்தினமும், நேற்றும் காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம், நீலாங்கரை – பல்கலைநகர், காசிமேடு – மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் – பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் உள்ள கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு பணியில்

22 ஆயிரம் போலீசார்

அதன்பேரில், சென்னை காவல்துறை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் விநாயகர் சிலை ஊர்வல பாதைகள் மற்றும் மேற்படி சிலை கரைக்கும் இடங்களில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, சிறப்புப்பிரிவு, ஆயுதப்படை, ஆயுதப்படையின் அதிவிரைவுப் படை, என 16,500 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர், ஆவடி காவல் ஆணையரகத்திலிருந்து 2,080 பேரும், தாம்பரம் காவல் ஆணையரகத்திலிருந்து 1,500 பேரும் என மொத்தம் 22,080 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றும் இதைத் தவிர, 21 பயிற்சி துணை கண்காணிப்பாளர்களும், 429 பயிற்சி உதவி ஆய்வாளர்களும், 280 தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும், 150 பயிற்சி காவலர்களும், ஈடுபடுத்தப்பட்டனர்,

சென்னை பெருநகரக் காவல், தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் 1,197 விநாயகர் சிலைகளும், நீலாங்கரை, பல்கலைநகரில் 537 விநாயகர் சிலைகளும் காசிமேடு, மீன்பிடிதுறைமுகத்தில் 180 விநாயகர் சிலைகளும், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் 24 விநாயகர் சிலைகளும், அருகில் உள்ள நீர்நிலைகளில் 10 சிலைகளும் என மொத்தம் 1,948 விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டது.

சிறப்பாக பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு அமைதியான முறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதை யொட்டி, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை வெகுவாக பாராட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *