சென்னை, நவ. 19:
சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்யாணி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பத்தூர் திருவேங்கட நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனம், சைதாப்பேட்டை தெற்குமாட வீதியில் உள்ள கலைச்செல்வன் என்பவர் வீடு, கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள தங்க நகை வியாபாரி சேட் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()





