சென்னை, மார்ச் 14–
சென்னையில் எஸ்.டி.கொரியர் நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலகங்கள், மற்றும் மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. கடந்த 9ந்தேதி அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தை சேர்ந்த நரேஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாராக இவர் இருந்து வருகிறார்.
எஸ்.டி. கொரியர்
அலுவலகத்தில்
இதனிடையே பல்லாவரம் எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.டி கொரியர் நிறுவனம் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரி என்பவருக்கு சொந்தமானதாகும். கொரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் அவரது சகோதரர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கொக்காடி கிராமத்தில் நவாஷ்கனி எம்.பி.,யினுடைய அண்ணனான அன்சாரி என்பவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த வந்தனர். அவர் வீடு பூட்டி இருப்பதால் பூட்டை உடைப்பதற்கான அனுமதி பெற முயற்சி செய்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள எஸ்.டி கொரியர் நிறுவனத்தின் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பண பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.