சென்னை, மார்ச் 15–
சென்னையை தலைமையிடமாக கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடந்துவருகிறது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நீலாங்கரை, தரமணி, அண்ணா நகர், சேத்துப்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வருமான வரித் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் பணப்பட்டுவாடா குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.