சென்னை, ஜூலை 22-–
சென்னையில் வீட்டில் திருட்டு உலோக சிலைகளை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான விலைமதிப்புடைய உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. உடனடியாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் களத்தில் இறங்கி குறிப்பிட்ட வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் விலை மதிப்புள்ள நாகாத்தம்மன் உலோக சிலையும், பிரமாண்டமான உடைவாள் ஒன்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டில் வசித்த சுமதியிடம் விசாரித்த போது அந்த சிலைகளை, சென்னை முகப்பேரை சேர்ந்த கலிய மூர்த்தி, தங்கராஜ் மற்றும் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கொடுத்ததாகவும், அவர்களிடம் விசாரித்தால்தான் இதுபற்றி விவரங்கள் தெரிய வரும் என்றும் கூறினார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதுக்கி வைத்திருந்த நாகாத்தம்மன் சிலையையும், உடை வாளையும் பறிமுதல் செய்தனர். குறிபிட்ட சிலையும், உடை வாளும் ஏதோ ஒரு கோவிலில் திருடப்பட்டவை என்றும் அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து முகப்பேரை சேர்ந்த கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். தங்கராஜ் வீட்டில் இருந்தும் இன்னொரு உலோக அம்மன் சிலை கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமதியும், அவரது கணவர் பிரகாசும், முகப்பேரை சேர்ந்த கலியமூர்த்தியும், தங்கராஜூயும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜேஷ் கண்ணன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவரிடம் விசாரித்தால்தான், மேற்கண்ட சிலைகளும், உடை வாளும் எந்த கோவிலில் திருடப்பட்டது என்று தெரியவரும் என்று கைதானவர்கள் கூறினார்கள். ராஜேஷ் கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான சுமதி, அவரது கணவர் பிரகாஷ் உள்பட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.தொடர்ந்து விசாரணை நடக்கிறது.