செய்திகள்

சென்னையில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை

சென்னை, ஏப்.8-

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் நிலையில், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தப் பணியில் 12 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளாக ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது. இதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் பொது மக்கள் வெளியே செல்லாமல் தேவையான அனைத்து பொருட்களை வாங்கும் விதமாக நடமாடும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன.

சென்னை மாநகராட்சி காய்ச்சல் முகாம்கள் அமைத்து ஜிங்க் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், கொரோனா பரிசோதனை, முகக்கவசம் விநியோகம், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் காய்ச்சல் எண்ணிக்கை குறைந்தது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையும், சுகாதாரத்துறைச் செயலர் எடுத்த பெரும் முயற்சியாலும் சென்னையில் பெரிய தொற்றுப் பகுதியாக விளங்கிய பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்தது. க்ளஸ்டர் எனப்படும் கொத்து கொத்தாகப் பரவும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு நேரடியாக சிகிச்சையும், அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தியதன் மூலமாகவும் தொற்று குறைந்தது.

கொரோனா அதிகரிப்பு

ஜனவரி மாதத்துக்குப் பின் இயல்பு நிலை திரும்பினாலும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வலியுறுத்தப்பட்டது. தொற்று எண்ணிக்கையும் குறைந்து வந்தது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாக வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, பொதுவெளியில் சமூக இடைவெளியின்றிக் கூடுவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 4 ஆயிரத்தைத் தொட்டது. பரவலாக அனைத்து மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் 1500 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த காரணத்தால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வீடு வீடாகச் சென்று சோதனை

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்த போது, முன்களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து வந்தனர். அறிகுறி இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது, அவர்களைக் காய்ச்சல் முகாம்களுக்கு அனுப்புவது உள்ளிட்டப் பணிகள் மூலம் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

எனவே அதே நடைமுறையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இப்பரிசோதனை 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

அவர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய உடல் வெப்ப பரிசோதனை செய்வார்கள். இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அந்தப் பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாமுக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்யயப்படும். இந்த கொரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி அங்கு அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த திட்டம் நல்ல பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது கொரோனாவின் புதிய அறிகுறியாக டயரியா, வாந்தி போன்றவை உள்ளதால் அதற்கான அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறியவும் சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு அறுவுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டு 45 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போட வலியுறுத்துவார்கள். அதுகுறித்த பயத்தைப் போக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *